| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.95 தனி திருத்தாண்டகம் | 
| அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ அன்புடைய மாமனும் மாமி யும்நீ
 ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ
 ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ
 துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
 துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
 இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
 இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.
 
 | 1 | 
| வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல் வெய்ய வினைப்பகையும் பைய நையும்
 எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
 எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
 அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
 அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த
 செம்பவள வண்ணர்வெங் குன்ற வண்ணர்
 செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.
 
 | 2 | 
| ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
 ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
 உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே
 பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
 பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
 காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
 காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.
 
 | 3 | 
| நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
 சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
 சொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை
 நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
 நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
 கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
 கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.
 
 | 4 | 
| திருக்கோயி லில்லாத திருவி லூருந் திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
 பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
 பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்
 விருப்பொடு வெண்வங்க மூதா வூரும்
 விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
 அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்
 அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.
 
 | 5 | 
| திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற் தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
 ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
 உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
 அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
 அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்
 பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
 பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.
 
 | 6 | 
| நின்னாவார் பிறரின்றி நீயே யானாய் நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
 மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
 மறைநான்கு மானாயா றங்க மானாய்
 பொன்னானாய் மணியானாய் போக மானாய்
 பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை
 என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
 ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே.
 
 | 7 | 
| அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய் அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
 எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
 எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
 பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
 பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தா யன்றே
 இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
 எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே.
 
 | 8 | 
| குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோல மாய
 நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
 நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
 விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்
 வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
 இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
 என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.
 
 | 9 | 
| சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து தரணியோடு வானாளத தருவ ரேனும்
 மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
 மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
 அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
 ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
 கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
 அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.
 
 | 10 | 
| jpUr;rpw;wk;gyk; | 
| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.96 தனி திருத்தாண்டகம் | 
| ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார் அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்
 தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்
 தலையதனிற் பலிகொண்டார் நிறைவாந் தன்மை
 வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்
 மானிடங்கொண் டார்வலங்கை மழுவாள் கொண்டார்
 காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்
 கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.
 
 | 1 | 
| முப்புரிநூல் வரைமார்பில் முயங்கக் கொண்டார் முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்
 செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்
 செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்
 துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்
 சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்
 அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்
 அடியேனை ஆளுடைய அடிக ளாரே.
 
 | 2 | 
| முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு மூசுமிள நாகமுட னாகக் கொண்டார்
 அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப
 அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்
 வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்
 மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்
 துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்
 சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே.
 
 | 3 | 
| பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார் பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்
 அக்கினொடு படவரவம் அரைமேற் கொண்டார்
 அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்
 கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்
 கொடியானை அடலாழிக் கிரையாக் கொண்டார்
 செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்
 செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே.
 
 | 4 | 
| அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார் அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்
 சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்
 சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்
 மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார்
 மாகாளன் வாசற்காப் பாகக் கொண்டார்
 தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்
 சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.
 
 | 5 | 
| பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார் பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்
 நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்
 நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்
 வாரடங்கு வனமுலையார் மைய லாகி
 வந்திட்ட பலிகொண்டார் வளையுங் கொண்டார்
 ஊரடங்க ஒற்றநகர் பற்றிக் கொண்டார்
 உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
 
 | 6 | 
| அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார் ஆலால அருநஞ்சும் அமுதாக் கொண்டார்
 கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்
 காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்
 மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்
 மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்
 துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்
 சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக்கொண் டாரே.
 
 | 7 | 
| படமூக்கப் பாம்பணையா னோடு வானோன் பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார்
 குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்
 கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்
 நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்
 நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்
 இடமாக்கி இடைமருதுங் கொண்டார் பண்டே
 என்னையிந்நா ளாட்கொண்ட இறைவர் தாமே.
 
 | 8 | 
| எச்சனிணைத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார் இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்
 மெச்சன்வியாத் திரன்றலையும் வேறாக் கொண்டார்
 விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்து
 உச்சநமன் றாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்
 உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
 அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்
 அடியோனை யாட்கொண்ட அமலர் தாமே.
 
 | 9 | 
| சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார் சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
 உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்
 உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்
 கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்
 காபால வேடங் கருதிக் கொண்டார்
 விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்
 வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
 
 | 10 | 
| குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார் குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்
 சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்
 தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்
 பராபரனென் மதுதமது பேராக் கொண்டார்
 பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
 இராவணனென் றவனைப்பே ரியம்பக் கொண்டார்
 இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
 
 | 11 | 
| திருச்சிற்றம்பலம் |